தமிழில் உள்ள பல சொற்களுக்கு முறையான பொருள் தெரிவதில்லை. காரணம் ஆங்கிலேயர்கள் தமக்கு வேண்டிய எழுத்தர்களைத் தயார் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்வி முறையில் நாம் படிக்கிறோம். மனப்பாடம் செய்வதைப் பெருமையாகக் கருதுகிறோம். தாய் மொழிக் கல்வியை இழிவாகக் கருதி எங்கும் ஆங்கிலம் எதிலும் ஆங்கிலம் – ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று தவறான பரப்புரையும் செய்கிறோம். தமிழ் மொழி மட்டும் கற்று அன்று கடாரம், யவனம், சிங்களம் போன்ற நாடுகளுக்கு எல்லாம் சென்று தமிழர்கள் வெற்றி பெறவில்லையா – வணிகம் நடத்தவில்லையா – பொருள் ஈட்டவில்லையா. எல்லாம் முடிந்தது தமிழால். தமிழை ஒதுக்கியதால் – தமிழர்களின் கடற்பயணத்தை மறந்ததால் ஆங்கில மொழிக்கு அடிமைகள் ஆனதால் இன்று உயர்நிலையை அடையாமல் தத்தளிக்கிறோம்.
சரி தமிழ் மொழியில் தினமும் ஒரு பாடல் படித்துப் பார்ப்போம். அப்போதாவது தமிழின் மாட்சி புரிகிறதா என்று பாருங்கள்.
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது
தாள் என்றால் முயற்சி. தாளாளன் என்றால் முயற்சி உடையவன். முயற்சி உடையவன் என்பவன் யார்? கடன்படாமல் வாழும் மனிதனே முயற்சி உடையவன் எனக் கருதப்பட வேண்டும்.
வேள் என்றால் உதவி. வேள் ஆளன் என்பவன் விருந்தினர் அமர்ந்திருக்க அவர்களை விட்டுவிட்டு உண்ணாதாவன். வேளாளன் என்பவன் விருந்தினர்களை உபசரித்து அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்பவன்.
கோள் என்றால் பிறர் சொல்வதைச் செவிமடுப்பது. இதனால் தான் கோள் சொல்கிறான் என்கிறார்கள். கோளாளன் என்பவன் பிறர் சொல்வதைக் கேட்பவன் மட்டுமல்ல அப்படிக் கேட்டதை மறக்காதவன்.
மிக்க நன்று
ReplyDelete