Friday, July 22, 2011

திருக்கோவிலில் பொன்மொழிகள் - சப்த ரிஷி இராமாயணம் - Ramayanam in short in tamil language for daily prayer

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எனக்கு 13.07.2011 அன்று அறுபது அகவை நிறைவடைந்ததால் இறைவனுக்கு நன்றி சொல்ல சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் உள்ள அருள்மிகு சந்தானகோபாலன் திருக்கோவிலில் பணம் செலுத்திப் பூசைகள் செய்வது என முடிவெடுத்தேன்.

மகப்பேறு வழங்கும் வல்லமை படைத்த திருக்கோவிலாக இக்கோவில் விளங்கி வருகிறது -  காலப்போக்கில் முகப்பேறு என மறுவி சென்னைக்கே உரிய நடையில் முகப்பேர் என வழங்குகிறது.  பூவிருந்தவல்லி பூந்தமல்லியாக மாறியது போல.  மிக அருமையான கோவில்.  விசாரணை அலுவலகத்தை அணுகி என் விருப்பத்தைத் தெரிவித்தேன்.  சொர்ணபுஷ்பாஞ்சலி என்று ஒரு பூசை இருப்பதாகத் தெரிவித்து இருநூறு ரூபாய் பணம் கட்டினால் தங்கத்தினால் செய்யப்பட்ட பூக்களை வைத்து அர்ச்சிப்பார்கள் என்று விளக்கினார்.  உடனே பணம் செலுத்தினேன்.  பிரசாதத்திற்காக ஒரு கிலோவிற்கு ரூபாய் நூறு மட்டுமே கட்ணம் எனத் தெரிவித்தார்.  எனவே மூன்று கிலோவிற்குப் பணம் கட்டினேன்.  நான் கொண்டு போயிருந்த ரூபாய் ஐநூறையும் கோவிலில் கட்டிவிட்டு கோவிலை வலம் வந்தேன்.  மிக அருமையான கோவில்.  மிகச் சிறப்பான நிர்வாகம்.  பணிவுடன் .கூடிய சேவை.  மனதைத் தொடக்கூடிய பூசைகள்.

கோவிலை வலம் வந்த போது கோவில் தூண்களில் பல அழகிய தமிழ் சொல்லோவியங்களைக் கண்டேன்.  அவற்றைக் குறித்துக் கொண்டே வந்தேன்.  நீங்கள் மகிழும் பொருட்டு அவற்றை உங்கள் பார்வைக்காகத் தருகிறேன்.  படித்துப் பாருங்கள்.  மகிழுங்கள்.  உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஜெயலலிதாநகர் மேற்கு - அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்தில் கோல்டன்ப்ளாட் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்து இந்த கோவிலுக்குச் செல்லலாம்.  திருமலையில் மலையப்பனைப் பார்த்த மனநிறைவு கிடைக்கிறது. 

அறுபதின் குரல்

அறுபது சொல்வது அனுபவ நிசம்.  அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிசம்.

பேசும் முன் கேள்
எழுதும் முன் படி
செலவழிக்கும் முன் பொருளீட்டு
முதலீடு செய்யுமுன் விசாரி
குற்றம் செய்யும் முன் நிதானி
ஓய்வு பெறும் முன் சேமி
இறக்கும் முன் தருமம் செய்

கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய்ப் பேசினால் வேலையை இழப்பாய்
வேகமாகப் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய்ப் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்

தாயின் அருமை தெரியும் மழலையின் பிறப்பில்
தந்தையின் அருமை தெரியும் பிள்ளையின் வளர்ச்சியில்
ஆசானின் அருமை தெரியும் மாணவனின் படிப்பில்
இறைவனின் அருமை தெரியும் இயற்கையின் படைப்பில்

அமைதியான கடல் திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை. 
அது போல் சோதனைகளையும் துன்பங்களையும் இறைவன் நமக்குக் கொடுப்பது மனதை திடப்படுத்தி பக்குவப்படுத்தி திறமைகளை முழுமையாக வெளியில் கொண்டுவந்து நாம் வாழ்க்கையில் உயர்வதற்காகத் தான்.  எனவே துன்பத்தைக் கண்டு துவளாதீர்.  தோல்வியைக் கண்டு தளராதீர்.

விழித்து எழுந்தவுடன் கிடைப்பதல்ல வெற்றி.  விழுந்து எழுந்தபின் கிடைப்பதே வெற்றி.

முயலும் வெற்றி பெறும்.  ஆமையும் வெற்றி பெறும்.  முயலாமை ஒன்று தான் வெற்றி பெறாது.

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட பிறருக்கு உதவிடும் கரங்கள் உயர்வானவை.

வாழ்க்கை சிறக்க நல்லவற்றைக் கூட்டிக் கொள்.  தீயவற்றைக் கழித்துக் கொள்.  அன்பைப் பெருக்கிக் கொள்.  சிறப்பான வாழ்க்கையை வகுத்துக் கொள் .

ஆபத்துக்கு உதவாத நண்பன்
அரும் பசிக்கு உதவாத அன்னம்
பெற்றோர் சொல் கேளா பிள்ளை
வறியோர்க்கு உதவாத பொருள்
பிறருக்கு உதவாத வாழ்க்கை
கணவனின் வருமானம் அறியாமல் செலவழிக்கும் மனைவி
எழுத்தறிவில்லாத பிறவி
-          இந்த ஏழும் பயனில்லாதவை


நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம்
நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.

இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது
இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல
விடாமுயற்சியினால் தான்.

தண்ணீரை சல்லடையில் எடுத்துச் செல்லலாம்.  அது பனிக்கட்டியாக உறையும் வரை பொறுத்து இருப்போமேயானால்.


இவையெல்லாம் தெருவிலே படித்த வாசகங்கள் அல்ல.  சென்னையில் அருள்மிகு சந்தானகோபாலன் திருக்கோயில் தூண்களில் அழகாக செதுக்கி உள்ள கருத்துகள்.  நீங்கள் மகிழ அடியேன் தொகுத்தேன். பயன் பெறுக.  ம.ச.அமர்நாத்.


வடபழனி பேருந்து நிலையத்தில் ஒரு பழைய புஸ்தகக் கடை உள்ளது.  அங்கே ஒரு அருமையான நூல் கிடைத்தது.  நீங்கள் படித்து மகிழ அதைத் தட்டச்சு செய்து கொடுத்துள்ளேன்.  படித்து மகிழுங்கள்



சப்தரிஷி இராமாயணம்

தேவேந்திரன் சப்தரிஷிகளை தேவலோகத்திற்கு வரவழைத்து இராமாயணத்தை அவர்கள் மூலம் கேட்டு மகிழ்ந்தார்.  ஏழு காண்டங்களையும் ஒவ்வொரு முனிவரும் ஒவ்வொரு காண்டமாய் ஒவ்வொரு சுலோகத்தில் சுருக்கமாகச் சொல்லி முடிவில் மூவரும் சேர்ந்து ஒரு சுலோகத்தைப் பாடினர்.  இந்த எட்டு சுலோகங்களையும் தினமும் பாராயணம் செய்வதால் இராமாயணத்தை முழுமையாகப் படித்த பலன் உறுதியாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  அருள்கூர்ந்து படித்து இறைவன் அருளைப் பெறும்படி வேண்டுகிறேன்.

கச்யபர் கூறிய பாலகாண்டம்

தசரத சக்கரவர்த்திக்க இராமன் மகனாகப் பிறந்தார்.  விசுவாமித்திர முனிவருடன் சித்தாச்ரமம் செல்லும் போது முனிவரின் கட்டளைப்படி தாடகையைக் கொன்றார்.  யாகத்தைக் காத்தார்.  பிறகு சனகனின் நகரம் செல்லும்போது அகல்யையின் சாபத்தைப் போக்கினார்.  சனகனின் யாகசாலை சென்று சனகனின் சிவவில்லை முறித்தார்.  சீதையைத் திருமணம் செய்து கொண்டார்.  திரும்பி அயோத்தி செல்லும் வழியில் பரசுராமனை வெற்றி கொண்டார்.  சீதாதேவியுடன் அயோத்தி மாநகரம் சென்றடைந்தார்.

அத்ரி முனிவர் கூறிய அயோத்யா காண்டம்

கருணை இல்லாத வேலைக்காரியான கூனியால் கைகேயின் மனது மாற்றப்பட்டது.  கைகேயியானவள்,பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டுக்குப் போகவேண்டும்  என்றும் இரண்டு வரங்களை தசரதனிடம் வேண்டினாள்.  இந்தச் சொல்லைக் கேட்ட தசரதன் மயங்கி விழுந்தார்.

பரத்வாஜர் கூறிய ஆரண்யகாண்டம்

தந்தையின் ஆணை என கைகேயி கூறியவுடன் இராமன் இலக்குவனுடனும் சீதையுடனும் கானகம் சென்றார்.  கங்கா தீரத்தில் குகனுடன் சேர்ந்தார்.  அங்கு ஜடை தரித்துக் கொண்டார்.  பிறகு சித்ரகூடம் சென்று தங்கினார்.  அங்கு தந்தைக்கு நீர்க்கடன் செலுத்தினார்.  பரதன் அயோத்தி வரும்படி வேண்டினான். தந்தையின் கட்டளையை மீறக்கூடாது எனக்கூறி தனது பாதுகையைக் கொடுத்து பரதனை அனுப்பினார்.  சிறந்த முனிவரான அகத்தியரிடம் சென்றார்.  அவரால் கொடுக்கப்பட்ட சிறந்த வில்லையும் அவரது உபதேசத்தையும் பெற்றுக் கொண்டார்.

விசுவாமித்திரர் கூறிய கிஷ்கிந்தா காண்டம்

அகத்தியன் கட்டளைப்படி இராமர் பஞ்சவடி சென்றார்.  முனிவர்களுக்கு அபயமளித்துக் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றினார்.  சூர்ப்பனகையின் மூக்கையும் காதையும் அறுக்கச் செய்தார்.  சுரன் முதலியவர்களை வதம் செய்தார்.  பொன்மானைக் கொன்று பின்னர் வாலியையும் கொன்று, கிஷ்கிந்தா அரசை சுக்கிரீவனுக்கு அளித்தார்.

கௌதமரின் சுந்தர காண்டம்

இராமதூதனாக அனுமார் சீதையைத் தேடி கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார்.  அசோகவனத்தில் சனகனின் மகளான சீதையைக் கண்டார்.  தான் இராமனின் தூதன் என்பதை நிரூபித்தார்.  பின்னர் அட்சயகுமாரனை வதம் செய்தார்.  இராவணனை எச்சரித்தார். இலங்கையை எரித்தார்.  பின்னர் திரும்பி வந்து கண்டேன் சீதையை எனக்கூறி இராமரின் மனத்தைக் குளிரவைத்தார்.

ஜமதக்கினி முனிவரின் யுத்த காண்டம்

இராமர் நளன் முதலிய வானர வீரர்கள் துணையுடன் சேது பாலத்தைக் கட்டி இலங்கையை அடைந்தார்.  கும்பகர்ணன், இந்திரசித்து ஆகியோரையும் இராவணனையும் போரில் வென்றார்.  கொன்றார்.  விபீடணனுக்கு முடிசூட்டினார்.  பின்னர் சீதை மற்றும் இலக்குவனுடன் புஷ்பகவிமானத்தில் ஏறி அயோத்தி திரும்பினார்.  பரதன் முதலியவர்களுடன் முடிசூட்டிக் கொண்டு சிறப்பாக அரசாட்சி செய்தார்.

வசிட்டரின் உத்தரகாண்டம்

இராமர் அசுவமேதயாகம் முதலிய சிறந்த யாகங்களைச் செய்தார்.  மிகச் சிறப்பாக தம்பிகளுடன் அரசாட்சி செய்தார். தனது புததிரர்களான குசலவ சகோதரர்கள் இருவரையும் முடிசூட்டி சரயூ நதியில் இறங்கி திவ்வியமான விமானத்தில் ஏறி வைகுண்டம் அடைந்தார்.

ஏழு முனிவர்களும் சேர்ந்து பாடிய சுலோகம்

அமுதத்திற்கு ஒப்பான இந்த இராமரின் கதையை தினம் எவர் படிக்கின்றார்களோ எவர் கேட்கின்றார்களோ அவர்கள் எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவர்களாகி புத்திரர்களுடன் பேரர்களுடன் இம்மை உலக சுகங்களை அனுபவித்து மறுமையில் விஷ்ணுவின் பதத்தை அல்லது ஸ்வரூபத்தை அடைவார்கள் என்பது உறுதி.

2 comments: